jeudi 17 juillet 2014

சொற்பொருள் பின் வருநிலையணி!



சொற்பொருள் பின் வருநிலையணி!

அணி என்ற சொல்லுக்கு அழகு என்பது பொருள். பொன்னணிகளை அணிந்து பெண்மணிகள் அழகு பெறுவதுபோல் அணி என்னும் உறுப்பால் கவிதை அழகு பெறுகிறது. மொழிக்கு அழகு செய்யும் அணியிலக்கணத்தை மட்டும் மாறனலங்காரம், தண்டியலங்காரம், அணியிலக்கணம் ஆகிய நூல்கள் எடுத்துரைக்கின்றன.

ஒரு செய்யுளில் ஒரு சொல் பலமுறை ஒரே பொருளில் பயின்று வருவதும், முன் வந்த பொருள் பின்னர்ப் பல இடங்களில் பயின்று வருவதும் சொற்பொருள் பின் வருநிலையணி எனப்படும்.

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை

பொருள்:

ஒருவருக்குச் சிறப்புடைய செல்வமாவது செவியான் வரும் கேள்விச் செல்வமே, அச்செல்வம் பிற செல்வங்கள் எல்லாவற்றினும் தலைமையானதாகும்.

இக்குறட்பாவில் "செல்வம்"  என்னும் சொல் பொருள் என்னும் ஒரே பொருளில் ஐந்து முறை பயின்று வந்துள்ளதால், இதில் சொற்பொருள் பின் வருநிலையணி அமைந்துள்ளது

---------------------------------------------------------------------------------------------------------------------------------

1.
கண்டுமொழி கண்டுமலர் காரிகையைக் கண்டுமனம்
கண்டுமலை காணும் களித்து!

2.
வண்ண விழிகளில் வண்ணக் கயலாடும்
வண்ணமிகு வண்ணங்கள் வார்த்து!

3.
சுவைதமிழ் பேசும் சுவையிதழ் பாவை
சுவைத்திட ஓங்கும் சுவை!

4.
மரைநுதல் மின்மரைக்கண் செம்மரைப் பொற்றாள்
மரைமனம் கொண்டதேன் மாது?

5.
மின்னும் உடையுடையாள்! மின்னும் நடையுடையாள்!
மின்னும் கவிதை விளைந்து!

6.
கொல்லை மலா்க்கொடியாள் கொள்ளை அழகுடையாள்
கொல்லைக் குயிலுறும் கூட்டு!

7.
கலைகளை அள்ளிக் கலைமகள் தந்தாள்
கலைமகன் கண்டான் கனவு!

8.
சீா்அடி கொண்டவளே! சீா்தமிழ் ஓங்கிட
சீா்அடி மேவின சீா்! 

9.
மன்னும் நெறிகளால் மன்னும் புகழன்றோ!
மன்னும் மனத்துள் மகிழ்வு!

10.
எல்லா உலகளந்து எல்லாம் அறிந்தவனுக்
கெல்லாப் புகழும் இயம்பு!

கவிஞா் கி. பாரதிதாசன்
17.07.2014

30 commentaires:

  1. Réponses

    1. வணக்கம்!

      அருமை அணிகளை அள்ளிமனம் சூடிப்
      பெருமை அடைவதே பேறு!

      Supprimer
  2. தங்கள் பதிவின் மூலம் இலக்கணம் கற்றேன் அய்யா!
    இது போன்ற கட்டுரைகள் எங்களுக்கு மிகுந்த பயன்தரும்!
    புறப்பொருள் வெண்பா மாலை காலத்திற்குப் பின் எடுத்துக்காட்டுகளை இலக்கணஆசிரியர்களே உருவாக்கித்தரும் வழக்குச் செல்வாக்குற்றது.
    தண்டி, மாறன் அலங்கார நூலாசிரியர்கள் இலக்கணத்ததிற்கான இலக்கியத்தையும் படைத்தளித்து இலக்கண-இலக்கிய ஆசிரியர்களாய் ஒருசேர மிளிர்கின்றனர்.
    நீண்ட காலத்திற்குப் பின் அந்த மரபின் தொடர்ச்சியை மீட்டு முன்னெடுத்துச் செல்வோராய் நீங்களே உள்ளீர்கள்!
    தொடர வேண்டுகிறேன்!
    நன்றி!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      உயா்வாய் உரைத்த உயா்தமிழ்ச் சொற்கள்
      இயலிசை இன்பம் எனக்கு!

      Supprimer
  3. வணக்கம்
    ஐயா.

    சிறப்பான வரைவிலக்கணம் குறளும் விளக்கமும் நன்று பகிர்வுக்கு நன்றி ஐயா
    த.ம 2வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      குறளும் விளக்கமும் கொஞ்சுதமிழ் கூறும்
      உறவென கொள்க உடன்!

      Supprimer
  4. குறளோடு அழகான அருமையான விளக்கம் ஐயா... நன்றி...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      குறள்நெறி போற்றும் குளிா்மனத் தோழா!
      திறன்தரும் செந்தமிழ் தேன்!
      !

      Supprimer
  5. வணக்கம் ஐயா!..

    அருமையானதொரு இலக்கண விளக்கம்!
    சொற்பொருள் பின் வருநிலையணி! அற்புதம்!
    நிறையச் சொற்பயிற்சி தேவையாக இருக்கின்றது.
    மிக மிகச் சிறப்பானது ஐயா! நன்றியுடன் என் வாழ்த்துக்களும்!

    எனது முயற்சியாக எழுதியுள்ளேன். பாருங்கள் ஐயா!..
    திருத்தம் தாருங்கள். மிக்க நன்றி!.

    இனம்வாழ எங்கள் இனமானம் காத்தா
    னினத்தோடு சேர்ந்த இனம்!

    வாழ்வ தொருமுறைவாழ்! இல்லையேல் அவ்வாழ்க்கை
    வாழ்வதா யாகுமோ வாழ்ந்து!

    நல்லிசைப் பாடலை நாளுங்கேள்! இன்னிசையால்
    சில்லென ஆகும் இசைத்து!

    அல்லது இப்படி...

    நல்லிசைப் பாடலை நாளுங்கேள்! இன்னிசையால்
    சில்லிடவுன் உள்ளம் இசை!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      இன்றே பயின்றெழுதி இன்றமிழ்ப் பா..தந்தாய்!
      நன்றே இனித்ததென் நாக்கு!

      Supprimer
  6. Réponses

    1. வணக்கம்!

      அருமைத் தமிழின் பெருமை அறிந்தே
      உாிமை உணா்க உடன்!

      Supprimer
  7. சிறந்த அறிவூட்டல்
    தங்கள் பதிவைக் கீழ்வரும் இணைப்பூடாக எனது தளத்திலும் பகிர்ந்துள்ளேன்.
    மரபுக் கவிதையில் இனிப்பும் உண்டு
    http://paapunaya.blogspot.com/2014/07/blog-post_17.html

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      நல்ல தமிழ்பரப்பும் நற்பணி யாளரே!
      வல்ல கவிஞனின் வாழ்த்து!

      Supprimer
  8. பாட்டெல்லாம் பாட்டாகா! நீபாடும் பாட்டொன்றே
    பாட்டென்று பாடுவேன்! பாடு!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பாட்டொன்று பாடினாய்! பாவையுன் பாட்டெறிந்து
      பாட்டென்று பாடுவேன் பார்

      Supprimer
  9. கவிஞர் அவர்களுக்கு வணக்கம்.

    இவ்விடத்தில் உங்களிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.

    வியாசகர் பெருமாள் அவர்கள் எழுதிய அணி இலக்கணத்தில் வரும்
    அணிகளை விளக்கி இது போலவே வெண்பாக்களில் கவிதை படைத்திட வேண்டும்.

    தவிர நான் முதகலை படிக்கும் பொழுது அணி இலக்கத்திற்கு
    மிகவும் எளிதான உதாரணங்கள் இல்லாததால்... அவர் கொடுத்த உதாரணங்களை
    புரியவில்லை என்றாலும் அதையே மனப்பாடம் செய்தே எழுதினேன்.

    நீங்கள் அணிக்கான விளக்கங்களுடன் உதாரணங்களாக கவிதைகளையும்
    படைத்தால் அதையே புத்தகமாக வெளியிட பிற்கால மாணவர்களுக்கும்
    என்னைப் போன்றவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    அதனால் இக்கருத்தை நீங்கள் அவசியம் ஏற்று எங்களுக்கு உதவிட வேண்டுகிறேன்.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      இயன்ற வரையிங்கு எழிலணி செய்வேன்
      உயா்ந்த தமிழென் உயிா்!

      திருத்தணிகை விசாகப்பெருமாளையா் அவா்கள் எழுதிய அணியிலக்கண நுாலில் பொருளணியில், உவமையணி முதல் எதுவணி இறுதியாக நுாறு அணிகள் விளக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டுச் செய்யுள்கள் முன்னோா் நுால்களிலிருந்து தரப்பட்டுள்ளன.

      இந்நுாலில் சொல்லணியில் சோ்வையணி, கலவையணி என இரண்டு அணிகள் உள்ளன. மொத்தம் 102 அணிகளை இந்நுாலில் நாம் கற்று இன்புறலாம்.

      Supprimer
  10. லக்னம் பார்த்து லட்ச்சாதிபதி ஆகத் துடிப்பவர்கள் மத்தியில்
    இலக்கணம் பார்த்து பொருள் கூறும் இலட்சிய வாதிகளும் இருப்பதை எண்ணி
    தமிழா தலை நிமிந்து நில்.
    புதுவை வேலு

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அன்னைத் தமிழே அடியவனின் நற்சொத்து!
      முன்னைப் பயனின் முடிவு!

      Supprimer
  11. அணியிலக்கணமும் அதற்கான எடுத்துக் காட்டான தங்கள் கவிதைகளும் அருமை!
    கரும்பு இனிக்கிறது என்று சொல்வது.....! மிகை என்று கருதுகிறேன்!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      புலவா் புகழ்மொழி பொன்னென மின்னும்!
      குலவும் இனிமை குவிந்து!

      Supprimer
  12. அணியிலக்கணத்தை அணியணியாய் உரைத்தமைக்கு
    பணிவாய் தங்கள் தாழ் தொழ
    குருவாய் வந்தீர் - அறிவைத்
    தருவீர் ஏகலைவன் எமக்கு

    மிக்க நன்றி ஐயா!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      இனிய தமிழ்கற்க என்றும் வருக!
      கனியும் கவிதைக் கலை!

      Supprimer

  13. அணிகள் அரும்நுாறை அள்ளி அளிக்கும்
    பணிகள் சிறக்கப் பணிந்தேன்! - மணிகள்
    ஒளிரும் வகையாய் உளத்துள் கவிதை
    வளரும் வகையாய் வழங்கு!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அன்பின் பெருக்கால் அடியேன் இடம்நாடி
      இன்பத் தமிழின் எழில்கேட்டீா்! - என்நன்றி!
      ஆசான் அரும்அாிய புத்திரனாா் நல்லருளால்
      பேசுவேன் நல்லணி பேறு!

      Supprimer
  14. அணியின் மடியில் அணியணியாய் ஆக்கம்
    அணியப்பா கொள்ளும் அழகு !

    அருமையான விளக்கம் அறிந்தேன் அகமகிழ்ந்தேன் ஐயா
    அத்தனையும் கற்றேன் கற்கின்றேன் !

    மிக்க நன்றி வால்த்ய்துக்கள் வாழ்க வளமுடன்
    12

    RépondreSupprimer
  15. இனிக்கும் கவியால் இனிக்கும் தமிழை
    இனித்திடக் கற்றேன் இனிது !


    அருமையான விளக்கம் அறிந்தேன் அகமகிழ்ந்தேன் ஐயா
    அத்தனையும் கற்றேன் கற்கின்றேன் !

    மிக்க நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    RépondreSupprimer
  16. கவிக்கு பெருமை யளிக்கும் கவியே
    கவியால் வணக்கம் உமக்கு.

    புனிதன்
    சென்னை

    RépondreSupprimer
  17. கவிக்கு பெருமை யளிக்கும் கவியே
    கவியால் வணக்கம் உமக்கு

    தமிழன்புடன்
    புனிதன்
    சென்னை

    RépondreSupprimer