mercredi 18 janvier 2017

பாட்டரங்கம் தொடர்ச்சி


ஏறு தழுவல்
  
துள்ளிப் பாயும் சல்லிக் கட்டுத் - தமிழ்த்
தொன்மை விளையாட்டு! - உடல்
வன்மை விளையாட்டு!
தள்ளிப் பாயும் சல்லிக் கட்டுப் - பண்டைத்
தமிழர் விளையாட்டு! - ஆடு
தாளம் பலபோட்டு!
  
அஞ்சா நெஞ்ச மஞ்சி விரட்டுப் - பே
ராண்மை விளையாட்டு! - மணக்
கேண்மை விளையாட்டு!
விஞ்சிப் பறக்கும் வீரக் காளை - ஓங்கி
வெற்றிப் பறைசூட்டு - புகழ்
முற்றி நிலைநாட்டு!
  
ஏறித் தாவி ஏறு தழுவல் - புவியில்
எங்கள் விளையாட்டு! - திண்தோள்
தொங்கல் விளையாட்டு!
சீறித் தாவிச் செல்லும் காளை - மேவிச்
சீர்மை மறங்காட்டு! - தமிழ்ச்
செம்மை அறங்கூட்டு!
  
கொல்லே[று] என்று குதித்தே ஓடும் - கூரிய
கொம்பு விளையாட்டு! - உயிர்த்
தெம்பு விளையாட்டு!
சொல்லேர் புலவர் சூடி மகிழும் - நெஞ்சத்
துணிவின் அரும்பாட்டு! - கேட்டுப்
பிணியாம் பகையேட்டு!
  
முட்டித் தள்ளி மோதும் காளை - எம்
முன்னை விளையாட்டு! - மண்
அன்னை விளையாட்டு!
தட்டித் தொடையைத் தாவும் காளை - புகழ்
தங்க இசைமீட்டு! - தைப்
பொங்க வளமூட்டு!
  
மலைபோல் தோளும் வான்போல் மார்பும் - கொண்ட
மாட்சி ஒளிருகவே - தமிழ்
ஆட்சி மலருகவே!
அலைபோல் பொங்கும் அருமைத் தமிழர் - உற்ற
ஆற்றல் வளருகவே - உலகு
போற்ற உயருகவே!
  
ஆண்டு தொடக்கம் அரும்..தைம் மாதம் - என்றே
கூவி முழங்குகவே! - ஒற்றுமை
மேவி இயங்குகவே!
கண்டு களித்துக் காணும் பொங்கல் - போன்றே
காலம் கமழுகவே - தைக்
கோலம் குலவுகவே!
  
காளை அடக்கும் காளை இடத்தில் - நற்
காதல் தொடர்ந்ததுவே - விழி
மோதல் நடந்ததுவே!
வாளைக் குமரி பாளைச் சிரிப்பில் - பன்
மாயம் நிகழ்ந்ததுவே! - மன
நேயம் நிறைந்ததுவே!
  
வெள்ளை யம்மா வீரக் காளை - துள்ளி
விரைந்து வந்ததுவே - இன்பம்
நிறைந்து தந்ததுவே!
பிள்ளை மொழியும் கொள்ளைச் சிரிப்பும் - மனப்
பித்தம் அளித்தனவே - இதழ்
முத்தம் விளைத்தனவே!
  
சாதிப் பேயைச் சமய வெறியை - நன்றே
மோதி விரட்டுகவே! - நல்
நீதி புகட்டுகவே!
ஆதித் தமிழன் அளித்த நுாலைத் - தினம்
ஓதி உணருகவே! - அருட்
சோதி சுடருகவே!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
15.01.2017

1 commentaire:

  1. ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) பற்றிய
    தீர்வு கிட்டும் வரை
    எழுச்சி ஓயப்போவதில்லையாம்...

    காலம் பதில் சொல்லுமே!

    RépondreSupprimer