vendredi 8 décembre 2017

திரிபாகி

திரிபாகி - 1
ஒரு சொல்லில் மூன்று சொற்கள்
  
மூன்றெழுத்துகளைச் சோ்க்க ஒரு சொல்லாகியும், அதன்கண் உள்ள முதலெழுத்தையும் இறுதியெழுத்தையும் சேர்க்க மற்றொரு சொல்லும், இடையெழுத்தையும் கடையெழுத்தையும் சேர்க்கப் மற்றொரு சொல்லும் வருவது திரிபாகியாகும் [திரி - மூன்று] [பாகி - பாகமுடையது]
  
சீர்தரும் செல்வி திகழிருக்கை மூன்றெழுத்து!
பேர்..தரும் வாலிபிணை முன்,னீறு! - தார்தரும்
பாமரைக் கம்பனின் பொன்படைப்பாம் ஈற்றிணை!
தாமரை! தாரை! மரை!
  
மூன்றெழுத்தால் வந்த சொல் தாமரை [ திருமகள் அமரும் பூ]
  
தாமரை என்ற சொல்லில் முதல் எழுத்தையும் ஈற்றெழுத்தையும் சேர்க்க தாரை என்ற சொல் வரும் [ இராமாயணத்தில் வரும் வாலி மனைவியின் பெயர்]
  
தாமரை என்ற சொல்லில் ஈற்றில் உள்ள இருவெழுத்து மரை [ மரை என்றால் மான். இராமாயணத்தில் பொன்மானைப் பெண்மான் கேட்கும் காட்சியைக் காணலாம்]
  
எண்ணிய மூன்று பெயர்களை ஈற்றடியில் வரும் வண்ணம் படைப்பது ஒருவகை திரிபாகியாகும்.
  
---------------------------------------------------------------------------------------
  
திரிபாகி - 2
  
முன்வரும் ஈரெழுத்து முன்தோற்றம்! மண்விளையும்
பின்வரும் ஈரெழுத்து! முன்னீறும் - இன்னீதழ்
எந்திவரும்! ஈற்றெழுத்[து] இன்பமருள் மாதம்!சீர்
நீந்திவரும் சொல்லை நிறுவு!
  
சீர் நீந்திவரும் சொல் - கவிதை
முன்வரும் ஈறெழுத்துக் கவி - குரங்கு [ மனிதர்களின் தோற்றம்]
பின்வரும் ஈரெழுத்து விதை - மண்விளையும்
முன்னெழுத்தும் ஈற்றெழுத்தும் சேர்ந்தால் கதை - இதழ்களில் வெளிவரும்.
ஈற்றெழுத்துத் தை - தமிழர்களின் புத்தாண்டு
  
இப்படி அமையும் பாடலும் திரிபாகி வகையைச் சேரும்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்.
08.12.2017

Aucun commentaire:

Enregistrer un commentaire