samedi 13 janvier 2018

வெண்பா மேடை - 61

வெண்பா மேடை - 61
  
குறட்டாழிசை - 3
  
1.
செல்லமே என்று சொல்லும் பொழுதெலாம்
வெல்லமே வந்து மேவி இனிக்குதடி!
  
2.
வஞ்சிக் கொடியே! வண்ண மதுமலரே!
கொஞ்சும் உன்மொழி நெஞ்சை உருக்குதடி!
  
3.
வீசும் காற்றே! விந்தை நடத்துடன்
பேசும் அழகு பித்தம் கொடுக்குதடி!
  
4.
செவ்விதழ் அசைந்து செப்பும் சீரெலாம்
அவ்விறை வீட்டின் அமுதை அளிக்குதடி!
  
5.
முல்லைப் பற்களை முட்டி வரும்மொழி
எல்லை இல்லா இன்பம் இசைக்குதடி!
  
6.
தாமரை இதழ்..நா தவழ்ந்து வரும்மொழி
பாநிறை ஏந்திப் பாசம் படைக்குதடி!
  
7.
மீட்டும் யாழென மெல்லொலிச் சொல்லெலாம்
ஊட்டும் தேனினைக் கூட்டிக் கொடுக்குதடி!
  
8.
வல்லொலிச் சொற்கள் வண்ண நடையுடன்
கொல்லெழில் ஏந்திக் கொள்ளை நடத்துதடி!
  
9.
இடையொலிச் சொற்கள் இளமைத் தமிழ்தரும்
படையுடன் வந்து பற்றிக் களிக்குதடி!
  
10.
பச்சைக் கிளியாய்ப் பகரும் சொல்லெலாம்
இச்சை யளித்தே வித்தை காட்டுதடி!
  
11.
கோலக் குயிலாய்க் கூவும் குரலிசை
கால மெல்லாம் காதல் கூட்டுதடி!
  
12.
கோதை நல்கும் குளிர்ந்த உரையெலாம்
போதை நல்கும் புலமை விளைக்குதடி!
    
வெண்செந்துறை போல அடி இரண்டாய் வந்து விழுமிய பொருளும் ஒழுகிய ஓசையும் இன்றி வருவதும் குறட்டாழிசை யாகும்.
    
ஓரடியில் எத்தனைச் சீா்களும் வரலாம். எத்தளையும் வரலாம். இரு அடிகளிலும் சீரின் எண்ணிக்கை ஒன்றுபட்டு வரவேண்டும்.
    
[மேலுள்ள பாடல் சிற்றின்பக் கருத்தை ஏந்தி வந்ததால் குறட்டாழிசை யானது]
  
இரண்டடிகளும் ஓரெதுகை பெற்று வரும். இரண்டடிகளிலும் தகுந்த இடத்தில் மோனை பெற்றொளிரும்.
  
வெண்செந்துறை போல அடி இரண்டாய் வந்து, விழுமிய பொருளின்றி, ஒழுகிய ஓசையின்றி வரும் குறட்டாழிசை ஒன்றை, விரும்பிய பொருளில் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் குறட்டாழிசையைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
13.01.2018

Aucun commentaire:

Enregistrer un commentaire