lundi 5 mars 2018

கேட்டலும் கிளத்தலும்



கேட்டலும் கிளத்தலும்

ஈட்டுபுகழ் - ஈட்டுப்புகழ், இங்கு வல்லினம் மிகுமா? மிகாதா? இலக்கண விளக்கத்துடன் விளக்கம் தரவும்.

பாவலர் இளமதி, சர்மனி

---------------------------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்

ஈட்டுபுகழ் - சிலர் இச்சொல்லை வினைத்தொகை எனவெண்ணி மிகுக்காமல் எழுதுகின்றனர்.   பலர் இச்சொல்லை வன்றொடர்க் குற்றியலுகரம் எனவெண்ணிப் மிகுத்து எழுதுகின்றனர்.

வன்றொடர் அல்லன முன் மிகா அல்வழி
[நன்னுால் - 181]

அல்வழிப் புணர்ச்சியில் நெடில்தொடர், மென்றொடர், இடைத்தொடர், ஆய்தத்தொடர், உயிர்த்தொடர்க் குற்றியலுகரங்களின் முன் வல்லினம் இயல்பாகும்.

காடு + பூத்தது = காடு பூத்தது - நெடில்தொடர்க் குற்றியலுகரம்
குரங்கு + தாவியது = குரங்கு தாவியது - மென்றொடர்க் குற்றியலுகரம்
சால்பு + பெரிது = சால்பு பெரிது - இடைத்தொடர்க் குற்றியலுகரம்
வரகு + சிறிது = வரகு சிறது - உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
எஃகு + கடிது = எஃகு கடிது - நெடில்தொடர்க் குற்றியலுகரம்

வன்றொடர் அல்லன முன்மிகா என்றதால் வன்றொடரில் வல்லினம் மிகும்.

கொக்குப்பறக்கும் - எழுவாய்த் தொடர்
சுக்குத்திப்பிலி - உம்மைத்தொகை
ஈட்டுப்புகழ் - வினைத்தொகை
முறுக்குப் பிழிந்தான் - இரண்டாம் வேற்றுமைத் தொகை
பட்டுச்சேலை - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை

இடைத்தொடர் ஆய்தத்தொடர், ஒற்றிடையில்
மிகாநெடில், உயிர்த்தொடர் முன்மிகா வேற்றுமை
[நன்னுால் - 182]

வேற்றுமைப் புணர்ச்சியில், இடைத்தொடர், ஆய்தத்தொடர், இடையில் ஒற்றுமிகாத நெடில்தொடர், இடையில் ஒற்று மிகாத உயிர்த்தொடர் ஆகியவற்றின் முன் வல்லினம் இயல்பாகும்.

தெள்குகால் - .இடைத் தொடர்
எஃகுகடுமை - ஆய்தத்தொடர்
நாகுகால் - ஒற்று இடையில் மிகாத நெடில் தொடர்
வரகுதாள் - ஒற்று இடையில் மிகாத உயிர்த்தொடர்

இவை யாவும் இயல்பாயின. மென்றொடர் முன்னும் வன்றொடர் முன்னும் வேற்றுமையில் வல்லினம் மிகும்.

குரங்குக்குட்டி - மென்தொடர்
கொக்குக்கால் - வன்றொடர்

1.
இடைத்தொடர், ஆய்தத்தொடர், ஒற்று இடையில் மிகாத நெடில்தொடர், ஒற்று இடையில் மிகாத உயிர்த்தொடர்  ஆகியவற்றின் முன் வேற்றுமைப் புணர்ச்சி அல்வழிப் புணர்ச்சி என்ற இருவழியும் வல்லினம் மிகாது.

2.
ஒற்று இடையில் மிகும் நெடில்தொடர், ஒற்று இடையில் மிகும் உயிர்த்தொடர், வன்றொடர் ஆகியவற்றுக்கு முன் வேற்றுமைப் புணர்ச்சி, அல்வழிப் புணர்ச்சி என்ற இரு வழியிலும் வல்லினம் மிகும்.

3.
மென்றொடர் அல்வழியில் வல்லினம் மிகாது. வேற்றுமையில் வல்லினம் மிகும்.

எழுவாய்த்தொடர், உம்மைத்தொகை இரண்டாம் வேற்றுமை தொகை ஆகியவற்றில் வல்லினம் மிகாது என்பது பொது விதி. ஆனால் வன்றொடர் குற்றியலுகரச் சொல்லாக  எழுவாய்த்தொடர், உம்மைத்தொகை, இரண்டாம் வேற்றுமைத் தொகை ஆகியன அமைந்தால் வல்லினம் மிகும் என்பது நன்னுால் உரையாசியர்களின் கருத்தாகும்.

ஆனால், ஏவலொருமை வினைமுற்றும், வினைத்தொகையும் வன்றொடர்க் குற்றியலுகர ஈற்றாயின் அவற்றின் முன் வல்லினம் மிகாது.

கட்டு பார்க்கலாம் - ஏவல் வினைமுற்று
சாற்றுகவி - வினைத்தொகை

பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
05.02.2018

Aucun commentaire:

Enregistrer un commentaire