samedi 10 mars 2018

வஞ்சித்துறை - 2




வஞ்சிப்பா மேடை - 2

வஞ்சித்துறை - 2
[மா + விளம்]

நீறு பூசினீர்
ஏற தேறினீர்!
கூறு மிழலையீர்
பேறும் அருளுமே!

[திருஞானசம்பந்தர் - 995]

தந்தையானவள்!

1.
அன்னை திருமொழி
என்னைக் காத்திடும்!
முன்னைப் பெரும்வினை
தன்னை நீக்கிடும்!

2.
அம்மா திருமுகம்
இம்மா நிலம்நிகர்!
சும்மா தொழுதிட
எம்மா நலமிடும்!

3.
காயும் மனமெழும்!
பாயும் துயரறும்!
தாயின் திருவடி!
மாயன் பொன்னடி!

4.
அன்பின் நிலமவள்!
இன்பின் விதையவள்!
பண்பின் மழையவள்!
நண்ணும் பயனவள்!

5.
மண்ணின் மணமவள்!
விண்ணின் கதிரவள்!
கண்ணின் ஒளியவள்!
பண்ணின் சுவையவள்!

6.
தந்தை யானவள்!
சிந்தை யானவள்!
விந்தை யானவள்!
முந்தை யானவள்!

7.
பணையாய் ஆர்த்தவள்!    
புணையாய்ப் பூத்தவள்!
அணையாய் நிற்பவள்!
துணையாய்க் காப்பவள்!

8.
உண்டைச் சோறினைத்
தொண்டை மறக்குமா?
தொண்டை நினைந்திடா
மண்டை சிறக்குமா?

9.
என்னை மனத்தினில்
என்றும் சுமப்பவள்!
பின்னை நலத்தினைப்
பின்னி அளிப்பவள்!

10.
அடுத்த பிறவியை
எடுத்துப் பிறந்துநான்
கொடுத்த நலங்களைத்
தொடுத்து மகிழுவேன்!

[பாட்டரசர் கி. பாரதிதாசன்]

மா + விளம் என்ற வாய்பாட்டில் ஓரடி அமைய வேண்டும். இவ்வாறு நான்கடிகள் ஓரெதுகை பெற்று வரவேண்டும். [ஓரடியில் இருசீர்கள் வருகின்ற காரணத்தால் மோனை கட்டாயமன்று]

ஆசான் சிறப்பினை உரைக்கும் வண்ணம் இவ்வகை வஞ்சித்துறை ஒன்றைப்   பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
    
"பாவலர் பயிலரங்கம்" என்ற முகநுால் குழுவில் இணைந்து தங்கள் விருத்தத்தைப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
08.03.2018

Aucun commentaire:

Enregistrer un commentaire